சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம்  இன்று சென்னை அமைந்தகரையில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுக பாஜக இடையேயான கூட்டறி முறிவைத் தொடர்ந்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது,  பாஜக மூத்த உறுப்பினர்கள் உள்பட பலர் புகார்கள் கூறி வருகின்ற னர். இதையடுத்து டெல்லி சென்ற அண்ணாமலை அங்கு தேசிய தலைவர் நட்டா, உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நிதியமைச்ச நிர்மலா சீத்தாராமன் உள்பட பலரை சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று சென்னை திரும்பியவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக,  தனது யாத்திரையை மேலும் 10 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்ததுடன், இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

அதனன்படி,  இன்று காலை சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  அண்ணாமலை இன்னும் வராததால்,  கட்சியின் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர்.  ஆனால், நேரம் ஆனதைத் தொடர்ந்து,  வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.  அண்ணாலை  ஒரு மணி நேரத்துக்கு பிறகு பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.

அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் முதல்முறையாக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் 65 பேர் பங்கேற்று உள்ளனர்.  மத்திய  இணையமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசைக்கப்பட உள்ளது. அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கருத்து கேட்கப்படும் என்றும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்தும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவது புதிதல்ல என்றும் இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் பலமுறை தனித்து போட்டியிருக்கிறோம் என்றும்  கூறினார்.  முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாஜக துணைத்தலைவர்கள், மாநில தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினர். கூட்டணி பற்றி தேசிய தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் கூறினார். அதே போல அண்ணாமலை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் துணைத்தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

பாஜகவின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாமல் இருப்பது பாஜக தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.