சென்னை:
திருவாரூர் உள்ளிட்ட 3 கோவில்களில் தேர் செல்லக்கூடிய வழிகளில் புதை மின் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ”திருக்கோவில் தேரோட்டத்தினுடைய மின் பாதைகளை புதை மின் வழித்தடமாக அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாகத் திருவாரூர் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களுக்கு புதை மின் வழித்தடம் அமைக்கும் பணிகளுக்கு நிதிகளை வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர். வரக்கூடிய ஆண்டுகளில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று எந்தெந்த கோவில்களில் புதை மின் வழித்தடம் வேண்டும் என்பதை அறிந்து அரசு கவனத்தில் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.