லக்னோ,

உபி.யில் பஞ்சாப் வங்கியில் லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை பணி முடிந்தவுடன் வங்கி மூடப்பட்டு, நேற்று (திங்கள்) காலை திறக்கப்பட்டது. அப்போது வங்கி அதிகாரிகள் லாக்கர் அறையை திறந்தனர்.

ஆனால், லாக்கர் இருந்த அறையில் உள்ள 30 லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.லாக்கர் அறையின் கதவு திறக்காத நிலையில் இது எப்படி நிகழ்ந்தது என திகைத்தபோது, லாக்கர் வைக்கப்பட்டிருந்த அறையின் பின்பகுதி சுவரில் 2 அடி அளவுக்கு துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  மோப்ப நாயுடன் வங்கிக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி லாக்கரின் 30 அறைகள் உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க வைர நகைகள், ஆவணங்களை கொள்ளையர் எடுத்துச்சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் ல் 435 லாக்கர்கள் இருந்ததாகவும், அதில் 30 அறைகள் மட்டுமே  உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும்,

கொள்ளையர்கள் உஷாராக, வங்கியில் இருக்கும் அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவற்றை செயலிழக்க வைத்துவிட்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.