சென்னை புரெவி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், கடற்கரையோர பாதுகாப்பு பணியில் 2 கப்பல்கள், 4 கடற்படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயலைத் தொடர்ந்து, தற்போது ‘புரெவி’ புயல் தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது. இன்று இரைவு, கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து படகுகள் சேதமடைந்து, கரை ஒதுங்கி உள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு பணியில், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, நிவாரண உதவிகளுடன் 2 கடற்படை கப்பல்களும், 4 கடற்படை விமானங்களும் மேற்கு கடற்படைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.