புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு பாய்ந்தது. இது பெரும் பரபரப்பைஏற்படுத்திய நிலையில்,  துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கிடையில், சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பசுமலைப்பட்டி என்ற இடத்தில்  துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவலர்கள், என்சிசி மாணவர்கள் என அனைத்து அரசு பாதுகாப்பு துறையினருக்கும் இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அங்கு  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல, நடைபெற்ற துப்பாக்கி சுடும் (Shooting Accident) பயிற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக, அருகே உள்ள நார்த்தாமலை பகுதியில் கொத்தமங்கலபட்டிச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி என்ற சிறுவன் பயிற்சி மையம் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, திடீரென அவரது தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அலடிதுடித்து மயக்கம் அடைந்த சிறுவனை கண்ட அவனது பாட்டி கூக்குரல் எழுப்பி அருகில் உள்ளவர்களை அழைத்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவன் புகழேந்தியை  கீரனூர் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர. பின்னர் மேல் சிகிச்சைக்கா  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று விசாரணை செய்தபோது, சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு, அருகே உள்ள காவலர் பயிற்சி மையத்தில் இருந்து பாய்ந்து வந்துள்ளதும், மற்றொரு குண்டு, அந்த வீட்டின் சுவரிலும் பாய்ந்துள்ளதும் தெரிய வந்தது.

இதற்கிடையில் குண்டுபாய்ந்த சிறுவனது தலையில் அறுவை சிகிச்சை செய்து குண்டை அகற்ற வேண்டும் என்று, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள் புதுக்கோட்டை திருச்சி சாலையில் நார்த்தாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர்  அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  புதுக்கோட்டை நார்த்தாமலையில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.