திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்புகளை கேரளா திறம்பட கையாண்டதாக பல்கேரியா கால்பந்து பயிற்சியாளர்  டிமிதர் பான்டேவ் பாராட்டி உள்ளார்.

துபாயைச் சேர்ந்த பிரபல விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் கேரளாவில் கால்பந்து பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. அதற்காக பாலக்காடு மாவட்டம் பட்டாம்பிக்கு கடந்த மார்ச் 4ம் தேதி வந்தார் பல்கேரிய கால்பந்து பயிற்சியாளர் வந்தார்.

அப்போது கொரோனாவின் தாக்கம் கேரளாவில் அதிகளவில் இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளை கேரளா திறம்பட கையாண்டதாக அவர் பாராட்டி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பேரழிவை உருவாக்கியது பற்றி நான் கேள்விப்பட்டேன். ஆனால் அதே தருணத்தில் நான்  கேரளாவில் இருந்ததை உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்.

எந்தக் கட்டத்திலும் நான் கவலைப்படவில்லை. வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. முதல்வர் பினராயி விஜயன் நிலைமையை பொறுப்பேற்று கையாண்ட விதம், சுகாதார அமைச்சர் முன்னிலை வகித்தது கண்டு வியக்கிறேன்.

இந்த பயங்கரமான நோய்க்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சர்வதேச பாராட்டை பெறுகிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.