சென்னை: தமிழ்நாட்டில் நாளை ( செப்.15) முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படு வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உள்பட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் கட்டிட அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இநத் நிலையில், நாளை முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளில் கட்டிட அனுமதி இணையதளம் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டது.
இதற்குஏற்ப மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறையினை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.