சென்னை

சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை நிறுத்த கட்டுமான உரிமையாளர் சங்க தென்னக மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து சிமெண்ட் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.   இந்த விலையை சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   இந்த விலை உயர்வால் பல கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.   அத்துடன் சொந்தமாக வீடு கட்டுவோரும் இந்த விலை உயர்வால் மிகவும் துயருற்றுள்ளனர்.

இதையொட்டி கட்டுமான உரிமையாளர் சங்கத்தின் தென்னக மையம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர்.  இந்த சந்திப்பு குறித்து மையத்தின் தலைவர்  எஸ் ராமபிரபு செய்தியாளர்களிடம், “உயர்ந்து வரும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து நாங்கள் இந்த சந்திப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடத்தினோம்.

அப்போது நாங்கள் பாராளுமன்ற நிலைக்குழு சிமிண்ட் ஒழுங்குமுறைக் குழு ஒன்றை அமைக்குமாறு பரிந்துரை செய்ததை நினைவு கூர்ந்தோம்.   ஏற்கனவே  செபி டிராய் மற்றும் ரெரா ஆகிய அமைப்புக்கள் பங்குச் சந்தை, தொலைத் தொடர்பு மற்றும் ரியல்; எஸ்டேட்டை ஒழுங்கு முறை செய்வதைப் போல் சிமெண்ட் தொழிலையும் செய்ய வலியுறுத்தினோம்.

தற்போது சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சிமெண்ட் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.  இந்தக் கூட்டமைப்பை ரத்து செய்து ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.  அத்துடன் இதே முறையைச் சுற்றுச் சூழல் மற்றும் வனப்பாதுகாப்புத் துறையில் கொண்டு வர  வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.