டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என்றும் கூறியதுடன், அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், நிதிநிலை கூட்டத் தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று கூறினார்.
2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது) இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கூட்டம் தொடங்கும் ஜனவரி 31ந்தேதி இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில், காலை 11 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்று கிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று மாலை பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டத் தொடருக்கு வரவேற்கிறேன் என அழைப்பு விடுத்தவர், பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும். அனைத்து உறுப்பினர்களும் திறந்த மனதுடன் தங்களது கருத்தை முன்வைக்கலாம். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும், நிதிநிலை கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், அனைத்து உறுப்பினர்களும் பிரதான ஆரோக்கியமான விவாதங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என்றும் கூறியதுடன், அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று கூறினார்.