சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது. அன்றைய தினமே தமிழக அரசின் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் (Budget 2021) கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையின் கூட்டத்தை ஆகஸ்டு 13ஆம் நாள் காலை 10 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்று காலை 10 மணிக்கு 2021 – 2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் நிதியமைச்சர் அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் நிதி அறிக்கை இது. இதை நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகிற 13 ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.
வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.