டெல்லி: 2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது. இரு கட்டங்களாக நடைபெறும் இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜனவரி 31ந்தேதி)  தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரையிலும், 2வது கூட்டத்தொடர் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

குடியரசு தலைவர் உரையைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023-ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதமாக கணிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டிஜிட்டல் முறையிலான 2022-23ம் ஆண்டுக்கான பொதுநிலை அறிக்கை (பட்ஜெட்)  தாக்கல் செய்கிறார். பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும செய்யப்படும் நாளான நாளை கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என நாடாளுமன்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மொத்தம் 79 மணி நேரம் நடக்க உள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு அமர்விலும் 1 மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ராஜ்யசபாவிலும் அமர்வுகள் 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த முறை ராஜ்யசபாவில் கேள்வி நேரம் அனுமதிக்கப்பட்டாலும் கேள்வி நேரத்தில் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.