சென்னை:
மிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்படுகிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறுகின்றன.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, இன்று பட்ஜெட் தாக்கலுக்காக பேரவை மீண்டும் கூடுகிறது. 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த திட்டத்துக்கான அறிவிப்பும், புதிய சில திட்டங்களுக்கான அறிவிப்பும், ஏற்கெனவே அமலில் உள்ள திட்டங்களுக்கான நிதி நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுகின்றன.

பட்ஜெட் தாக்கலானதும், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். நாளை (மார்ச் 21) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 22-ம் தேதி விடுமுறை, அதன்பிறகு, 23, 24, 27, 28 ஆகிய 4 நாட்கள் பேரவைக் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது.

பேரவையில் கடந்த ஆண்டு இறுதியில் 2-வது முறையாக, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதை 5 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தற்போது இந்த கூட்டத்தொடரில் மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இதுவும் பேரவை அலுவலில் இடம்பெறும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.