சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து விவாதிக்கும் வகையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது திமுக. முதல்வராக மு.க.ஸ்டாலலின் தலைமையில் அமைச்சரவை மே 7ந்தேதி பதவி ஏற்றது. அதையடுத்து, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. ஜூன் 24ஆம் தேதியுடன் சட்டப்பேரவையை, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து, 2021 – 22 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டில் தொடங்கும் என்று தகவல்கள் பரவின. இதையடுத்து ஆகஸ்டு 13ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, முதல்முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
முன்னதாக நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால், அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதம் தேர்தலை முன்னிட்டு, இடைக்கால நிதி நிலை அதிமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.