சித்தார்த்தனை கொன்ற புத்தன்! : போதையின் கொடூரம்!

Must read

திருவள்ளூர்:  
து போதையில் சொந்த தம்பியையை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் ம.பொ.சி நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் மதன் (56). இவருக்கு ஜெயபுத்தன் (26), சித்தார்த்தன் (24) என்ற மகன்கள் உள்ளனர். இவர்களில்  மூத்தவர் ஜெயபுத்தன், எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இளையவர் சித்தார்த்தன் மூன்றாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
நேற்றிரவு இவர்களின் தந்தை மதன், அருகில் உள்ள புத்த விகார் மடத்துக்கும், தாயார்,  அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்றிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட தம்பி, சித்தார்த்தன்
கொலை செய்யப்பட்ட தம்பி, சித்தார்த்தன்

மூத்த மகன் ஜெயபுத்தன் குடிக்கு அடிமையானவர். நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
தூக்கத்தில் இருந்து எழுந்த இளையவர் சித்தார்த்தன், , ‘ஏன், என்னுடைய  பேண்ட், சட்டையை போட்டுக்கொண்டு  போதையில் ஊர் சுற்றுகிறாய்’ என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில், மூத்தவர் ஜெயபுத்தன், சமையல் அறைக்கு சென்று, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து,  தனது தம்பி சித்தார்த்தனை கீழே தள்ளி கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். ரத்தம் பீறிட்டது. அவர் அலறித் துடித்தார்.
கொலை செய்த அண்ணன், ஜெயபுத்தன்
கொலை செய்த அண்ணன், ஜெயபுத்தன்

உடனே அங்கிருந்து புத்த விகார் மடத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த தனது தந்தை மதனிடம், ‘தம்பி கீழே விழுந்து விட்டான். வீட்டுக்கு உடனே வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
அவரும்,  பதறியடித்து வீட்டுக்கு வந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்தார்த்தனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்தார்த்தன் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து திருவள்ளூர் தாலுகா எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் காவலர்கள்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர்.
விசாரணையில் ஜெயபுத்தன்தான் கொலையாளி என்பது தெரியவந்தது. அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். காவல்துறையினர் அவரை பிடித்து, கைது செய்தனர்.
ஒரு மகன் கொலை செய்யப்பட… இன்னொருமகன் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களது தந்தை மதன் மருத்துவமனையில், ஆற்றாமையால் அலறித்துடித்தார்.
“அஹிம்சையை போதிக்கும் புத்தரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான். அதனால்தான்  பிள்ளைகளுக்கு, ஜெயபுத்தன், சித்தார்த்தன் என்று பெயர் வைத்தேன்.  ஆனால் மதுவெறி, என் ஒரு மகனை கொலைகாரனாக்கிவிட்டது.. இன்னொருவன் உயிரைப் பறித்துவிட்டதே..” என்று தந்தை மதன் கதறியதைப் பார்த்த மருத்துமனையில் இருந்தவர்கள் கலங்கிப்போனார்கள்.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article