சென்னை அடையாறு முதல் கூவம் வரையிலான பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் பணி 2023 ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1878 ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் பக்கிங்காம் கோமகனால் பஞ்சத்தில் தவித்த சென்னை மக்களுக்கு வேலை கொடுக்கும் பொருட்டு தோண்டப்பட்ட கால்வாய் என்பதால் இதற்கு பக்கிங்காம் கால்வாய் என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் ஆந்திராவின் கிருஷ்ணா நதி முதல் விழுப்புரத்தின் மரக்காணம் வரையில் சுமார் 420 கி.மீ. தூரம் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நீர்வழித்தடத்தில் 2500 படகுகளுடன் சரக்கு போக்குவரத்தை நடத்திவந்தது ஆங்கிலேய ஆட்சி.

தற்போது சென்னையில் அடையாறு முதல் எண்ணூர் வரையிலான 48 கி.மீ. தூரம் உள்ள இந்த கால்வாய், கூவத்திற்கு தெற்கே, தெற்கு பக்கிங்காம் கால்வாய் என்றும், கூவத்திற்கு வடக்கே வடக்கு பக்கிங்காம் கால்வாய் என்றும் அழைக்கப்படுகிறது.

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அதிகரித்த நிலையில் நீர் வழிப் போக்குவரத்துக்கான வரவேற்பு குறைந்ததைத் தொடர்ந்து முறையான பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் கழிவு நீர் கலந்ததாலும் பயனற்றுப் போய் உள்ள இந்த கால்வாயை சுமார் 1000 கோடி ரூபாயில் மறுசீரமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவிருக்கிறது.

கால்வாயின் எல்லையை வரையறுக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பின் எல்லை நிர்ணய வேலை தொடங்கப்படும் அதன் பின்னர் தான் ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய் கரைகளை அடையாளம் காண முடியும். இந்த வேலைகள் முடிந்தவுடன் கால்வாயின் நீர்நிலையை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது.

ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்புடன், சீரமைப்பு திட்ட வரைபடத்தை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இந்த பணி தாமதமாவதாகவும். அதன் பின், அரசின் அனுமதிச் சான்றிதழைப் பெற ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றும் கூறப்படுவதால், பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணி 2023 ம் ஆண்டில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.