தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை இன்று காலை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இதனுடன் கட்சியின் பிரச்சார பாடலையும் வெளியிட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தயாராகி வரும் நடிகர் விஜய்யின் த.வெ.க, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளது.
மாநாட்டில் கட்சியில் கொள்கை மற்றும் சின்னம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் இன்று தனது கட்சி அலுவலகத்தில் ஏற்றிவைத்த கட்சி கொடி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய இந்தக் கொடியின் நடுவில் வாகைமலர் மற்றும் இரண்டு யானை படங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் யானை பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் என்பதால் அக்கட்சியினர் மிகவும் கொந்தளித்துள்ளனர்.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ( BSP) சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் மற்றும் வழக்கும் தொடுக்கப்படும்.என்று தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டால், தேசிய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்து, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் BSP கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் கட்சி கொடி பறக்க விட்ட சில மணி நேரங்களிலேயே அது சர்ச்சையானதால் விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.