டெல்லி: அடுத்த 6 மாதங்களுக்குள் 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தொடங்கும் என்று அதன் தலைவர் பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு துறையில் வோடபோன், ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிரடி அறிவிப்புகளை அவ்வப்பொழுது அறிவித்து வருகின்றன. ஜியோவின் வருகையால், ஏராளமான வாடிக்கையாளர்கள் 4 ஜி சேவைக்கு தாவினர்.

அதனை உணர்ந்து கொண்ட பல நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகைகளை குறி வைதது களத்தில் இறங்கி இருக்கிறது.

அதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவையை தொடங்க மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. இதையடுத்து, அந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன் குமார் புர்வார் கூறி இருப்பதாவது: அரசாங்கம் சிறப்பான சலுகையை அறிவித்து இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனமும், அதன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சேவை வழங்க உள்ளனர்.

இந்த சேவையை அறிமுகப்படுத்த 6 மாதங்களாகும். அதற்கான தொழில்நுட்ப ரீதியான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்த புள்ளிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

4 ஜி சேவைக்கா 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.  36 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பிஎஸ்என்எல் நிலுவை தொகை வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அவை அனைத்தும் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் சரியாகி விடும் என்றார்.