புதுடெல்லி: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவரும் நிலையில், அந்நிறுவனத்திற்கு நாடெங்கிலும் பரவியுள்ள ரூ.50000 கோடி மதிப்பிலான நிலங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், அந்நிறுவனம் சந்தித்துவரும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில், அந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 79000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றனர். அதன்படி, தற்போது அந்நிறுவனத்தில் 45% ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்களை விற்று நஷ்டத்தில் இருந்து மீள அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் முக்கியமான பகுதிகளில் உள்ள நிலங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் வாயிலாக மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும்.

சென்னையில் அயனாவரம் மற்றும் புழல் பகுதிகளில் உள்ள ரூ.1,750 கோடி மதிப்பிலான 40 ஏக்கர் நிலங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.