மும்பை:

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவன தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

மத்தியஅரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அசூர வளர்ச்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிசை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் கோபத்தில் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலில் மதிய உணவுநேர இடைவேளையின்போது, ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக தொழிற்சங்கத்தின்ர்  தெரிவித்து உள்ளனர்.

விரைவில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில், தங்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பி உள்ள தொழிற்சங்கத்தின்ர்,  எங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், நாங்கள் சும்மா உட்கார மாட்டோம். நாங்கள் எங்கள் எதிர்ப்பை பிரதமர் அலுவலகத்திற்கு (பி.எம்.ஓ) கூட எடுத்துச் செல்வோம் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் மன்றத்தின் கன்வீனர் தரம்ராஜ் சிங் தெரிவித்து உள்ளனர்.

சம்பளம் வழங்கப்படாதது குறித்து கூறிய  பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கத் தலைவர் கே செபாஸ்டியன்  “எங்கள் நிறுவனங்களின் மறுமலர்ச்சி தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களைப் புரிந்து கொள்ள விரும்புவதாகவும்”  அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் இரு நிறுவனங்களின் ஊழியர்களும் மும்பை மற்றும் டெல்லியில் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களின் நிலுவை ஊதியம் மற்றும்,  ஓய்வூதிய வயதை மாற்றக்கூடாது என்றும் கோரிக்கை விடுப்போம் என்றும்,  எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களில் முதலீடு செய்வதை அரசாங்கம் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது, அதுகுறித்தும் விளக்கம் பெற விரும்பு வதாகவும் தெரிவித்துள்ளார்.