டில்லி

ரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மறுமலர்ச்சித் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.   கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்குக் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்படாத நிலையில் இந்நிறுவனங்கள் உள்ளன.   இந்நிறுவனம் கடந்த 2015-16 முதல் இந்த வருடம் வரை தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது.

பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி கட்னத 2015-16 ஆம் வருடம் ரூ.4793 கோடி நஷ்டத்தில் இருந்த நிறுவனம் வருடா வருடம் தொடர்ந்து நஷ்டம் அதிகரித்துச் சென்ற வருடம் ரூ.14,202 கோடியை எட்டி உள்ளது.  இந்நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் ஊதியத்தைக் குறித்த நேரத்தில் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று பி எஸ் என் எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி எஸ் என் எல் நிறுவன மறுமலர்ச்சி திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.  இந்த திட்டத்தில் விருப்ப ஓய்வு, 4 ஜி அறிமுகம் மற்றும் பி எஸ் என் எல் சொத்துக்களின் மூலம் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.” எனத் தெரிவித்துள்ளது.