டில்லி

பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.850 கோடி ஊதிய நிலுவைத் தொகை தீபாவளிக்குள் வழங்கப்படும் என நிறுவனத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.  ஒவ்வொரு மாதமும் வருமானத்தை விடச் செலவு அதிகரித்து வருவதால் இந்நிறுவனத்துக்கு ஊதியம், கடன் பாக்கி மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான பணம் என எதுவும் அளிக்க முடியாத நிலை உள்ளது.    இதனால் கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு மிகவும் தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஊழியர்களுக்குக் கடந்த மாத இறுதி நாளன்று வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கி ரூ.850 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது.   சென்ற மாதம் பி எஸ் என் எல் வருமானம் ரூ.1600 கோடியாக இருந்த  போதிலும் ஏற்கனவே பல மாதங்களாக வழங்க வேண்டிய பல நிலுவைத் தொகைகள் இதில் இருந்து அளிக்கப்பட்டுள்ளன.  அப்படி இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டதற்கு ரூ. 1600 கோடி பாக்கி உள்ளது.

வங்கிகள் அளிக்கும் என நிர்வாகம் எதிர்பார்த்த தொகை மற்றும் அரசு உதவி ஆகிய எதுவும் பிஎஸ்என்எல் க்கு கிடைக்காத நிலை உள்ளது.   ஊழியர்கள் வரும் 18 ஆம் தேதி அதாவது நாளைக்குள் ஊதியம் வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பி எஸ் என் எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி கே பர்வார், ”பி எஸ் என் எல் நிறுவனத்தின் 1.76 லட்சம் ஊழியர்களுக்குச் செப்டம்பர் மாத ஊதியம் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  நிர்வாகம் தீபாவளிக்குள் இந்த நிலுவைத் தொகையை வழங்கும்” என உறுதி அளித்துள்ளார்.