டில்லி:

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால் இந்த வாகன உற்பத்தியாளர்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கவேண்டும் என தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதை வெளியிட்ட நீதிபதிகள்  எஸ்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர்  பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்யவும், வாகன பதிவு செய்யவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

ஏப்ரல் 1 முதல் பி.எஸ்.4 ரக இன்ஜின்கள் பொருத்திய வாகனங்கள் தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வாகன நிறுவனங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வாகனங்களை விற்க அனுமதி வழங்க வேண்டுமென்று கோரினர்.
ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

ரூ.14,000 கோடி மதிப்பிலான 8.5 லட்சம் வாகனங்கள் வி்ற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனங்களை எவ்வாறு வி்ற்பனை செய்வது என தெரியாமல் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் டில்லி உள்பட 10 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சுட்டிகாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.