விழுப்புரம்:

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிய ஆராயி என்பவரது 10 வயது மகன் படுகொலை செய்யப்பட்டான். ஆராயும் அவரது 14 வயது மகளும் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மர்ம கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குற்றவாளிகள் பிடிபடாததால் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. வெள்ளம்புத்தூர் கிராம பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

மொத்தம் 300 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. ஆராயி வீட்டில் நடந்த சம்பவத்தைப் போலவே சீர்காழி, மீன்சுருட்டி, ஏ.கே.சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்துவிட்டு, 2012 முதல் 2016 வரை சிறையில் இருந்து வெளியே வந்த புவனகிரியைச் சேர்ந்த வீரன் மகன் தில்லைநாதன் (வயது 36) என்பவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. திருக்கோவிலூர் மற்றும் அதைச் சுற்றி திரிந்த தில்லைநாதனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் தில்லைநாதன் சிக்கினார்.

போலீசார்  மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விபரம்…

தில்லைநாதன் 2009-ம் ஆண்டு, திருச்சி மற்றும் கடலூர் சிறையில் இருந்தபோது திருக்கோவிலூர் மணம்பூண்டியைச் சேர்ந்த ராமு என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவர் மூலம் திருக்கோவிலூருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பகல் நேரங்களில் கைலி சட்டையுடன் சுற்றித்திரியும் தில்லைநாதன், மின் விளக்குகள் இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படித்தான் வெள்ளம்புத்தூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறான்.

ஜட்டியுடன் கொள்ளையடிக்க செல்வது இவனது வழக்கம். ஏற்கெனவே ஒரு கொள்ளை வழக்கில் செல்போனை வைத்து காவல்துறை இவனைக் கைது செய்ததால், அதிலிருந்து செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்திருக்கிறான். தில்லைநாதனின் அண்ணன் போனை மட்டும் அடிக்கடி பயன்படுத்தியுள்ளான்.

ஆனால், ஒவ்வொரு சம்பவத்தின்போதும், அந்த போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவான். அதேபோல, பெண்களைத் தாக்கி, அவர்களின் நகைகளைக் பறித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், நகைகளை மட்டும் திருடிச் சென்றுவிடுவான். ஆராயி குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை என்பதையும், வீட்டில் தாழ்ப்பாள் இல்லை என்பதையும் தெரிந்துகொண்ட தில்லைநாதன், வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான்.

அப்போது, அங்கு தூங்கிய ஆராயியை கம்பியால் அடித்துள்ளான். சிறுவன் சமயனும், தனமும் அந்த நேரத்தில் கண் விழித்ததால் இருவரையும் கடுமையாக அடித்துள்ளான். இதில் சிறுவன் சமயன் இறந்துவிட்டான். மற்ற இருவரும் மயங்கியதும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான். அவர்கள், வலியில் துடித்ததால் நகைகளையும், 9,000 ரூபாய், ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.