பாலசோர், ஒரிசா

ரிசா மாநிலம் பாலசோரில் கடனுக்கு கோழிக்கறியை விற்க மறுத்த இரு சகோதரர்கள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரிசா மாநிலம் பாலசோரில் ஜகதாபதி பகுதியில் கோழிக்கடை ஒன்றை பிகாஷ் ஜேனா மற்றும் தபன் ஜேனா என இருவர் நடத்தி வருகின்றனர்.   சகோதரர்களான இருவரும் தங்கள் குடும்பத்துடன் அதே கடையின் பின் பகுதியில் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடனுக்கு கோழிக்கறி கேட்டுள்ளனர்.   அவர்கள் பழக்கம் இல்லாதவர்கள் என்பதால் சகோதரர்கள் மறுத்துள்ளனர்.   அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் ஒரு கூர்மையான ஆயுதத்தால் சகோதரர்களை தாக்கி உள்ளார்.

சகோதரர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த போது இருவரும் தப்பி ஓடி விட்டனர்.   சகோதரர்களின் குடுமத்தினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.   அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.   காவல்துறையினர் கொன்று விட்டு தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.