புதுடெல்லி: இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், இரண்டு அணியிலுமே சகோதரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது சுவாரஸ்யமான அம்சம். இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் மொத்தமாக 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா – கருணால் பாண்ட்யா ஆகியோரும், இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் – டாம் கர்ரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆனால், இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற சகோதரர்களின் செயல்பாடே சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு நேற்று பேட்டிங் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. ஆனால், அதில் அவர் சொதப்பினார். பெளலிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரின் சகோதரர் கருணால் பாண்ட்யா, பேட்டிங்கில் புதிய உலக சாதனையையே நேற்று படைத்துவிட்டார்.
அறிமுகப் போட்டியிலேயே, குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனைதான் அது! மேலும், பந்துவீச்சிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல், 1 விக்கெட் எடுத்தார்.
ஆனால், இங்கிலாந்து சார்பில் பங்கேற்ற கர்ரன் சகோதரர்கள், நேற்று பெளலிங் மற்றும் பேட்டிங் என எதிலுமே சாதிக்கவில்லை. இருவருமே பந்துவீசினாலும் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் இவர்கள் எடுத்த ரன்கள் 12 & 11.
எனவே, இந்தியாவுக்கு சகோதரர்களால் லாபமே! ஆனால், இங்கிலாந்துக்கு நேற்று பெருத்த நஷ்டம்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் அமர்நாத், பதான் மற்றும் பாண்ட்யா சகோதரர்கள், ஆஸ்திரேலியாவின் சேப்பல், வாஹ், ஹசி மற்றும் மார்ஷ் சகோதரர்கள், ஜிம்பாப்வேயின் ஃபிளவர் சகோதரர்கள், பாகிஸ்தானின் முகமது, அக்மல் சகோதரர்கள், இங்கிலாந்தின் கர்ரன் சகோதரர்கள் ஆகியோர் புகழ்பெற்றவர்கள்.