உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.

Must read

உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எந்தளவிற்கு பிரசித்திபெற்றதோ அதற்கு ஈடான சிறப்புகளைக் கொண்டது வைகை புட்டுசொக்கநாதர் ஆலயம். புட்டு என்றால் திண்பண்டமாச்சே, அது ஏன் சொக்கநாதருடன் இணைந்திருக்கிறது?  இந்த பொதுக் கேள்விக்கான பதிலைத் தேடியும், இன்று இத்திருத்தலத்தில் நடக்கும் திருவிழாவை தரிசிக்கவும் ஆலயம் நோக்கி பயணிப்போம்

எங்கே உள்ளது ?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வைகைக் கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவே இக்கோவிலிலும் சொக்கநாதரின் வலது பக்கம் மீனாட்சி அம்மனுக்கு தனிச் சன்னதி உள்ளது சிறப்பாகும்.

தல அமைப்பு

கோவில் பிரகாரத்தைச் சுற்றிலும் முருகன், விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி, சுந்தரானந்தர், துர்கை அம்மன், வீரபத்திரர், கல்யாண விநாயகர், சப்த கன்னிமார், திருஞானசம்பந்தர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் என பல தெய்வங்கள் வீற்றுள்ளன. மேலும் புட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மன், வந்தியம்மை போன்றோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

கொடுங்கோல் மன்னன்

வைகைக்கு உட்பட்ட பகுதிகளை ஆண்டு வந்தவன் அரிமர்த்தன பாண்டிய மன்னன். இவரது அவையில் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். ஒரு நாள் மன்னரின் ஆணைக்கிணங்க குதிரை வாங்கச் சென்றார் மாணிக்கவாசகர். அப்போது வழியில் திருப்பெருந்துறை பகுதியில் தென்பட்ட சிவலிங்கத்திற்காக தன்னிடம் இருந்த செல்வங்களைக் கொண்டு கோவில் கட்டினார். தான் குதிரை வாங்க மன்னர் கொடுத்த தொகையும் தீர்ந்துவிட்டது என உணர்ந்த அவர் மன்னனிடம் இதுகுறித்து கூறி தண்டனை பெற்றார்.

உதவிசெய்த சிவபெருமான்

மன்னன், மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார். அப்போது இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்தார் மாணிக்கவாசகர். உடனே சிவபெருமான், சதுரகிரியில் இருந்த நரிகளை எல்லாம் பரி என்னும் குதிரைகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவை அனைத்தும் இரவில் மீண்டும் நரிகளாக மாறி மன்னனின் குதிரைகளைக் கொன்று தீர்த்தது.

வைகையை உடைத்த சிவன்

இதனால், கோபம் முற்றிய மன்னன், மாணிக்கவாசகரை வைகை நதிக் கரையில் இருந்த மணலில் வெயிலில் வாட்டி சித்ரவதை செய்தான். மணலின் சூட்டிலிருந்து மாணிக்கவாசகரைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். அந்த வெள்ள நீர் கரைகளை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்துவிட்டது.

புட்டுக்கு மண் சுமந்த சிவன்

வைகை ஆற்றின் உடைந்த கரைகளை சீரமைக்கப் பொதுமக்களுக்குக் கட்டளையிட்டான் பாண்டிய மன்னன். வீட்டிற்கு ஒருவர் வீதம் பணியில் ஈடுபட்டனர். புட்டு விற்கும் வந்தி என்னும் மூதாட்டியால் மண்ணை சுமந்து பணியில் ஈடுபட முடியவில்லை. அப்போது, மூதாட்டிக்கு உதவுவதற்காக கூலியாள் உருவில் வந்தான் சிவன். அவருக்கு கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் கூலியாக பெற்றார்.

பிரம்படி பெற்ற சிவன்

புட்டினை சாப்பிட்ட சிவன் அசதியில் உறங்கிவிட்டார். ஆனால், வந்திருப்பது சிவன் என்று தெரியாத மன்னன் கூலியாளின் முதுகில் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். இறைவனுக்குக் கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் அனைத்தும் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். அப்போதுதான் அது சிவபெருமான் என உணர்ந்து அவருக்கு அங்கேயே கோவில் அமைத்து வழிபட்டார்.

More articles

Latest article