Bring agriculture income under tax net, says NITI Aayog member
விவசாயிகளும் தங்களது வருமானத்திற்கு உரிய வரியைக் கட்ட வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் திபேராய் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாட்டின் வருவாயை உயர்த்த வருமானவரி விலக்குகளை ரத்து செய்ய வேண்டியது அவசியம். தனி நபர்களுக்கான வருமானவரி விலக்குகளையே ரத்து செய்ய வேண்டும். அதே போல் வருவாய்ப் பிரிவினரில் கிராமப்புறம், நகர்ப்புறம் எனப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கிராமப்புறத்தில் விவசாயிகள் உட்பட அனைத்து வருவாய்ப் பிரிவினரும் வருமானவரி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு ரத்து செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டுமானால் 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கான சராசரி வருவாயைக் கணக்கிடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் முக்கியமான அமைப்பான நிதி ஆயோக்கின் உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் முக்கிய அங்கமான நிதி ஆயோக் உறுப்பினர் ஒருவர் இப்படிக் கூறியிருப்பது, விவசாயிகள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டையே சந்தேகிக்க வைப்பதாக சமூக, பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.