சென்னை: தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைந்துள்ளது என உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டிவிட் பதிவிட்டுள்ளார்.

தடைழ்நாட்டில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில்ஆளும் கட்சியான திமுக பெருவெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.  74 ஊராட்சி ஒன்றியங்களில் 73 திமுக வசம் வந்துள்ளது. 140 மாவட்ட ஊராட்சிகளில் 138 இடங்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் 5 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுகவுக்கு கிடைத்த இந்த வெற்றி திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி திமுக அரசை பாராட்டி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.