திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரசவத்துக்கு டாக்டர் லஞ்சம் கேட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தபகுதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் கன்னியமாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறத்தைச் சேர்ந்தவர் ராஜன். அவரது மனைவி சஜிதா. நிறைமாத கர்ப்பிணியான சஜிதாவை பிரசவத்துக்காக கேரள மாநிலம் பாறசாலையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு அவருக்கு சரிவர மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு பணியில் இருந்த பெண்மருத்துவர் நித்யா ராஜேஷ் , சஜிதா குடும்பத்தினரிடம் ரூ.5000 லஞ்சம் கொடுத்தால்தான் பிரசவம் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனால் செய்வதறியாது திகைத்த ராஜன் பணத்துக்கு அலைந்து திரிந்து பணம் புரட்டி கொண்டு வர தாமதம் ஆகி உள்ளது.
இந்நிலையில் சஜிதாவுக்கு பிரசவ நேரம் நெருங்கி உள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோச மாக தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் நித்யா, சஜிதாவை உடனே திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அங்கு சுஜிதாவுக்கு பிரசவம் ஏற்பட்டது. வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. அடுத்த ஒருசில நிமிடங்களில் சஜிதாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாறசாலை மருத்துவமனையில் அவருக்கு உடனே பிரசவம் பார்த்திருந்தால், தாயும், குழந்தையும் நலமோடு இருந்திருப்பார்கள். ஆனால், டாக்டரின் லஞ்ச பேராசையால் தாயும், சேயும் பலியாகி உள்ளது.
இதனால் கொதிப்படைந்த சஜிதாவின் பெற்றோர், மருத்துவமனையில் தகராறு செய்தனர். பின்னர் டாக்டர் நித்யா லஞ்சம் கேட்டது குறித்தும், அதனால்தான் தாயும், குழந்தையும் இறக்க நேரிட்டது என்றும் பாறசாலை போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த பரிதாப மரணம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பெண் மருத்துவரே இரக்கமில்லாமல், மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகாரை தொடர்ந்து திருவனந்தபுரம் கோட்டாட்சியர் திவ்யா பாறசாலை மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.