காஞ்சிபுரம்,
லஞ்சபுகார் காரணமாக காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் சர்தார். இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த தகவல்களை தொடர்ந்து, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடை இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு ஆகியவற்றை வழங்க ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் லஞ்சம் கேட்பதாக ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சிவபாதசேகர் தலைமையிலான அதிகாரிகள், துரைப்பாக்கத்தில் உள்ள சர்தார் வீடு, மற்றும் காஞ்சிபுரம் நகரில் உள்ள முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.