சென்னை: தாய்ப்பாலை ஒருவர் தானம் செய்யலாம் ஆனால், விற்பனை செய்யக்கூடாது. இந்தியாவில்தாய்ப்பால் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான தாய்ப்பால் அடைக்கப்பட்டிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வர்த்தக ரீதியில் தாய்ப்பால் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னை மாதவரத்தில் மருந்து கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். (நல்லா ஆய்வு செய்யுங்கப்பா அது தாய்ப்பாலா அல்லது ஆவின் பாலா)
தாய்ப்பால் என்பது, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வுக்கு அடிப்படையானது. தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நவீன மருத்துவ வளர்ச்சியால், பல பெண்கள் இயற்கையாக குழந்தைகளை பெற விரும்பாமல், வாடகை தாய் மற்றும் பல்வேறு சிகிச்சைகள் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். மேலும், தங்களது அழகு குறைந்துவிடும் என நினைத்து பல பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவும் மறுத்து வருகின்றனர். இதுமட்டு மின்றி, சில தாய்மார்கள், தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல், அதாவது அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்காத நிலையில், மாற்றுத் தாயிடம் இருந்து தாய்ப்பாலை பெற முயற்சிக்னறனர். இதற்காக பல மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை வாங்கி அதை பத்திரப்படுத்தி தேவைப்படும் பச்சிளங்குழந்தைகளுக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் வழங்கி வருகிறது. இதற்காக, தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த தாய்ப்பால் வங்கிகள் பொதுவாக மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கும். தனது குழந்தைக்கு கொடுத்தது போக இருக்கும் பாலைத்தான் தாய்மார்கள் பொதுவாக தானமாக வழங்குவார்கள்.
ஆனால், சமீப காலமாக தாய்ப்பால் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரகசியமாக ஆன்லைன் மூலம், தாய்ப்பாலை வணிகரீதியாக சில நிறுவனங்கள் தாய்ப்பாலை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதை தடுக்கும் வகையில், இந்திய அரசு, தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் “ உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006இன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வணிகரீதியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்,” இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு விதிகளை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த வணிகர் முத்தையா என்பவரை கைது செய்ததுடன், அவரது கடையில் இருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அந்த கடைக்கும் சீல் வைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள், சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த, நியோலாக்டா என்ற நிறுவனம் தாய்ப்பாலை அதிகாரப்பூர்வமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்தது. இதறகு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரத்து செய்தது. இந்த ரத்துக்கு எதிரான வழக்கு 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.