பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ விக்கல் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், கடந்த 10 நாட்களாக விக்கல் இருந்துவரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு பேசும் போதும், உணவருந்தும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் விக்கல் ஏற்படுவதாகவும், தொண்டை வறட்சி ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது உடல் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள போல்சனாரோ, கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்ய நடந்த முயற்சியின் காரணமாகவே தான் இப்போது அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2020 ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும், அப்போது சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட போல்சனாரோவை ஈமு கோழி ஒன்று கடித்தும் நினைவுகூறத்தக்கது.
விக்கல் காரணமாக ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற அவரை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்த அவர்கள், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினர்.
பல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்குப் பின் குளிர்பானம், அவசர அவசரமாக சாப்பிடுவது, தொண்டை வறட்சி அல்லது மன உளைச்சல் காரணமாகவும் விக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.