திருவாரூரிலிருந்து 24.கி.மீ. தொலைவில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம். ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப் பூசித்தான். அதனால் பிரமதபோவனம் என வழங்கப்பெறும். தனது சாபம் நீங்க பிரம்மா தீர்த்தம் அமைத்து நீராடி மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு சாபம் நீங்கிய தலம் . இதனால் இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர். மணலால் ஆன லிங்கம் ஆனதால் அமாவாசை அன்றுமட்டும்சாம்பிராணி தைலம் சாத்தி அபிஷேகம், மற்ற நாட்களில் குவளை சாத்திதான் அபிஷேகம்.
நவகோள்களும் தோஷம் நீங்கி பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ள தியாகர் ஊழிப்பரன், அவனிவிடங்கத்தியாகர். நடனம் வண்டு நடனம் . விநாயகர் தியாக விநாயகர்.
முருகன் சுந்தரவடிவேலன். சுந்தரமூர்த்திகளுக்குக் குண்டையூர்கிழார் தந்த நெல்மலையைப் பூதங்களைக் கொண்டு திருவாரூரில் சேர்ப்பித்த அற்புதத்தலம். தீர்த்தம் முத்திநதியாகிய சந்திரநதி, மணிகர்ணிகை, இந்திர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், விநாயகதீர்த்தம், சக்தி தீர்த்தம் என்பன. விருட்சம் தேற்றாமரம். பிரமதேவர், திருமால், இந்திரன், அகத்தியன்,முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகோள்கள், ஒமகாந்தன் முதலியோர் வழிபட்ட தலம் . இது தருமை ஆதீன திருக்கோயில்.