அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம்.

தல சிறப்பு:

ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக அருள்பாலிப்பதும் இத்தல சிறப்பாகும்.

தலபெருமை:

பிரம்மாவின் இருப்பிடம் தாமரை மலர் என்கின்றன புராணங்கள். அதனாலோ என்னவோ இந்தக் கோயிலும் ஒரு தாமரைப் பூவைப்போல குளத்தின் நடுவில் அமைந்துள்ளது. நான்கு புறமும் படிகள் அமைந்த அழகான குளம். அதன் நடுவே இருக்கும் கோயிலுக்குச் செல்ல நீளமான பாதை சுற்றிலும் தண்ணீர் நிறைந்து நிற்க, ஜில் காற்று நம்மைத் தழுவ இயற்கையின் பசுமை கண்களைக் குளிர்வித்து மனதிற்கு இதமளிக்க அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது கோயில். ஒரே ஒரு கர்ப்பகிருகம் மட்டுமே இருக்கிறது

வலம் வர விசாலமான பிரதட்சணப் பாதை, கர்ப்பகிரகத்தின் எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தின் உச்சியில் ஒரு சூலம் காணப்படுகிறது. சூலத்திலும் துவஜஸ்தம்பத்திலும் ஏராளமான மணிகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. கருவறையில் உயரமான தாமரை மலர் போன்ற பீடத்தில் பிரம்ம லிங்கேஸ்வரரின் தரிசனம் கிடைக்கிறது. அந்த லிங்கத் திருமேனியின் நான்கு புறமும் பிரம்மாவின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் நான்முகன். நான்கு புறமும் தரிசனம் செய்வதற்கு வசதியாக நான்கு ஜன்னல்கள் அமைத்திருக்கிறார்கள். அபிஷேக, அர்ச்சனை, பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.

பேரரசர்கள் பலர் ஆண்ட பெருமைக்கும் பழமைக்கும் உரிய தலம் இது. வெவ்வேறு வம்சத்து அரசர்கள் ஆட்சி செய்ததால் அவரவர் காலத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டதில், இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தனவாம். காலப்போக்கில் பல அழிந்து விட இப்பொழுது ஒரு சில கோயில்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படியோ, பிரம்மாவுக்கு கோயில்கள் இருப்பதே அபூர்வம். பழைமையான பக்தி அதிர்வுகள் நிறைந்த கோயில், கிராமிய மணத்தைத் தொலைக்காத வித்தியாசமான சூழல். வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல், தரிசனம் செய்தாலே தேவைகள் எல்லாம் ஈடேறச் செய்வார் பிரம்ம லிங்கேஸ்வரர்.

தல வரலாறு:

எல்லோருடைய தலை எழுத்தையும் எழுதும் பிரம்மாவுக்கு அவர் தலையில் யார் என்ன எழுதினார்களோ சாபத்துக்கு மேல் சாபம் வந்து சேர்ந்தது அவருக்கு. அதுவும் பட்டகாலிலே படும் என்பது போல, ஒரே மாதிரியான சாபம் முதலில் சாபமிட்டவர் பிருகு முனிவர். ஒரு சமயம் ரிஷிகள் எல்லோரும் சேர்ந்து, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள். அந்த யாகத்தில் யாருக்கு முதல் மரியாதை தருவது என்ற கேள்வி எழுந்தது. அதற்காக மும்மூர்த்தியரையும் பரீட்சிக்கத் தீர்மானித்த ரிஷிகள், அந்தப் பணியைச் செய்திட பிருகு முனிவரை அனுப்பினர். பிருகு முனிவர் முதலில் சென்ற இடம் சத்யலோகம். அதாவது பிரம்மாவின் இருப்பிடம். அங்கே முனிவருக்கு சரியான வரவேற்போ மரியாதையோ கிடைக்காததால் முனிவர் சினத்தோடு பிரம்மாவுக்கு சாபம் விட்டார். பூவுலகில் உனக்கு கோயிலே இல்லாமல் போகட்டும்! முனிவரின் ராசியோ என்னவோ பிரம்மாவுக்குக் கிடைத்த இரண்டாவது சாபமும் பூலோகத்தில் பூஜையோ கோயிலோ உனக்கு இல்லாமல் போகட்டும் என்றே விடப்பட்டது. இரண்டாவது சாபத்தை விட்டவர், சிவபெருமான்.

திருமாலும், நான்முகனும் தங்களில் யார் பெரியவர் என்று சண்டைபோட்டது, அப்போது ஜோதிவடிவாக சிவபிரான் அங்கே தோன்றி தனது திருவடி திருமுடி காணச் சொன்னாது, அந்த சமயத்தில் பிரம்மா பொய் சொல்லி சாபத்துக்கு ஆளானது எல்லாம் உங்களுக்கே தெரியும்தானே! மூன்றாவதாக சாபம் விட்டவர், சரஸ்வதி தான் படைத்தவளைத் தானே மணந்துகொண்டதால் பிரம்மாவுக்கு வந்த சாபம் அது. அதுவும்வேறே என்ன மண்ணுலகில் உமக்கு கோயில் எழுப்பமாட்டார்கள்… என்ற அதே சாபம்தான்.

இப்படி சாபத்துக்கு மேல் சாபம் வாங்கியதாலோ என்னவோ, மற்ற எல்லோருடைய சாபத்துக்கும் விமோசனம் கிடைப்பதுபோல் நான்முகனின் சாபத்துக்கு மட்டும் விமோசனமே இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஆறுதலளிப்பதுபோல் மிக அபூர்வமாக ஓரிரு கோயில்கள் பிரம்மாவுக்கு இருக்கின்றன. அப்படி அமைந்த கோயில்களுள் பிரபலமானது. புஷ்கர் பிரம்மா கோயில்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக அருள்பாலிப்பதும் இத்தல சிறப்பாகும்.

பொது தகவல்:

இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு சிவன், ரங்கநாதர் வேணுகோபாலசாமி கோயில்கள் அமைந்திருப்பது ஆச்சரியமான விஷயம். அருகில் ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் தரிசனமும் கிடைக்கிறது.

பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள மூலவரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இருப்பிடம் :

ஆந்திராவில் குண்டூரில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள செபரோலு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.