சேலம்: நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் ரோகித் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் ரோகித்தின் உயிரிழப்புக்கு முழு காரணம் திமுக அரசின் அலட்சியம் மட்டுமே! கமிஷன் வாங்குவதில், டெண்டர் கொள்ளை அடிப்பதில் இருக்கும் கவனம் எல்லாம், பணிகளை பாதுகாப்பாக செய்வதில் இந்த விடியா அரசுக்கு இருக்கிறதா?
இது போன்ற உயிரிழப்பு நேர்வது இதென்ன முதல் முறையா? தவறு என்பது ஒருமுறை நிகழ்வது தான். மீண்டும் மீண்டும் நடப்பது என்பது, நிர்வாகச் சீர்கேட்டால் நடந்த கொலை என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? “தெரியாம நடந்து போச்சு மா… SORRY” என்று சொல்வாரா?
இன்னும் எத்தனை முறை இதையே நாம் கேட்க வேண்டும்?
உயிரிழந்த சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் நிச்சயம் போதுமானது அல்ல.
எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது எனினும், இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது, முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]