புதுடில்லி: சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐந்து வயது சிறுவன் தனது வளர்ப்பு குடும்பத்தால் தத்தெடுக்கப்படும் நிகழ்வு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியது. இதன் காரணமாக இணையமே திக்குமுக்காடியது.

ஐந்து வயது சிறுவன் மைக்கேல் கிளார்க் ஜூனியர் தத்தெடுக்கப்படுவதற்காக மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்றத்திற்கு தனது வளர்ப்பு குடும்பத்துடன் நீதிமன்ற விசாரணைக்காக வந்திருந்தான்.  ஆகவே, தத்தெடுக்கப்படுவதன்   உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ள, அவன் தனது முழு மழலையர் பள்ளி வகுப்பையும் விசாரணையைப் பார்வையிட அழைத்திருந்தான்.

அவனது விருப்பத்திற்கிணங்க அவனுக்கு ஆதரவாக, அவனது வகுப்பைச் சேர்ந்த 36 மாணவர்கள் அபிமான இதய அட்டைகளைக் காட்டி, நீதிமன்ற பெஞ்சுகளில் அமர்ந்து அவனை உற்சாகப்படுத்தினர்.

மைக்கேல் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட படங்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டியால் பேஸ்புக்கில் பகிரப்பட்டன. மைக்கேல் தனது நண்பர்கள் அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பியபடி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்யுமாறு தனது அம்மாவிடம் கேட்டிருந்தார். அவரும் மைக்கேலின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.

இந்த இடுகை உடனடியாக வைரலாகி 52k லைக்குகளையும் 118k பகிர்வுகளையும் பெற முடிந்தது. கென்ட் கவுண்டியின் கூற்றுப்படி, மைக்கேல் தனது முழு மழலையர் பள்ளி வகுப்பையும் தனது தத்தெடுப்பு விசாரணைக்கு அழைத்து வந்ததன் காரணம் அவர்களும் தன்னுடைய குடும்பத்தின் ஒரு அங்கம் என்று அவன் நம்புகிறான் என்பதுதான்.

தனது வளர்ப்பு பெற்றோர் தனது நிரந்தர பெற்றோராக மாறியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினான்.  அவர்களும், அவனுக்கு உற்காகமூட்ட தமது கைகளில் இதய அட்டைகளைத் தூக்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.