மான்செஸ்டர்: பாகிஸ்தானுடன் இன்று மோதவுள்ள இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் மிக மோசமாக செயல்பட்டார். மொத்தமாக 100 ரன்களை வாரி வழங்கிய இவர், 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். எனவே, இவருக்குப் பதில் வேறொரு பவுலர் அணியில் களமிறங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மான்செஸ்டர் மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால், இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளரைக் காட்டிலும் வேகப்பந்து வீச்சாளரே பொருத்தமானவராய் இருப்பார் என்பதால், முகமது சமியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது.

மேலும், ஷிகர் தவான் காயமடைந்ததால், அவர் இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கிறார்கள். எனவே, ராகுல் களமிறங்கும் 4வது இடத்தில் விஜய் சங்கருக்கு பதில், முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதற்கு முன்னதாக, தோனி 4வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட நிகழ்வுகள் உதாரணமாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியப் போட்டியில், அவர் 4வது இடத்திலேயே களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டமெல்லாம் ஒருபுறம் இருக்க, மான்செஸ்டரில் இன்று மழைபெய்யும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதால், முதலில் போட்டி நடக்குமா? என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.