தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்காக சில ஊராட்சிகளை இந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லை ஆலந்தூரில் இருந்து மீனம்பாக்கம் வரையிலும் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரையிலும் சுமார் 750 சதுர கிலோமீட்டராக அதிகரித்த போதும் அதனைத் தாண்டி உள்ள குடியிருப்புகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு 2021ம் ஆண்டு 7,23,017 மக்கள் தொகையுடன் 84.7 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

தவிர, 3,45,996 மக்கள் தொகையுடன் 65 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆவடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டது.

தற்போது தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளின் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த உள்ளாட்சித் துறை முடிவெடுத்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியுடன் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கௌல் பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர், திருசூலம், ஒட்டியம்பாக்கம், திருவாஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு மற்றும் சித்தாலப்பாக்கம் ஆகிய 18 பஞ்சாயத்துகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 172.34 சதுர கி.மீ.ஆக அதிகரிப்பதுடன் அதன் மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது.

அதேபோல் ஆவடி மாநகராட்சியுடன் திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் வானகரம், அயப்பாக்கம், நெமிலிச்சேரி, அடையாலாம்பட்டு, நடுகுத்தகை, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், நாசரேத்பேட்டை, அகரம் மேல், பணவீடு தோட்டம், பாரிவாக்கம், கண்ணப்பாளையம், சோரஞ்சேரி, மோரை, வெள்ளனூர், பழவேடு, மேப்பூர் ஆகிய 19 பஞ்சாயத்துகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் ஆவடி மாநகராட்சியின் பரப்பளவு 188 சதுர கி.மீ.ஆக அதிகரிப்பதுடன் அதன் மக்கள் தொகை 6,95,212 ஆக உயர உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த இரண்டு மாநகராட்சிகள் தவிர மேலும் பல மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த பஞ்சாயத்துகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிக்காலம் 2024 டிசம்பர் மாதம் நிறைவடைவதை அடுத்து 2025 ஜனவரி மாதம் இவை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.