சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்று சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம்மீது, பாட்டில், கற்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தி. நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள், அலுவலகம் மீது, பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். இரவு நேரம் என்பதால், கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முந்தரசன் வலியுறுத்தியுள்ளார்.