லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து பிரதமராக பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது எளிமையான நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், கொரோனா காலக்கட்டத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் அவர்மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. மேலும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமானதும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நீதித்துறை மந்திரி டேவிட் வோல்ப்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கினர். இந்த பரபரப்புக்கு மத்தியில், போரிஸ் ஜான்சன் கட்சியில் துணை கொறடாவாக பதவி வகித்த கிரிஸ் பின்ஷர் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதையடுத்து அவர், துணை கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சி எம்.பி பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்காக பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஆனால், கிரிஸ் பின்ஷர் விவகாரத்தில், போரிஸ் ஜான்சன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்று கூறி, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சன் நிலைகுலைந்தார்.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.