கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தகங்களை வரதட்சணையாகக் கேட்டு பெற்றுள்ளார்.
இஸ்லாமியர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது மணப்பெண் கேட்கும் வரதட்சணையை (மகர்) மணமகன் வீட்டார் கொடுப்பது சம்பிரதாயம். இதன்படி தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களையே பலரும் கேட்டு பெறுவார்கள்.
ஆனால், கேரள மாநிலம் மலப்பப்புரத்தைச் சேர்ந்த சாலா நெச்சியில் தனது கணவரிடமிருந்து புத்தகங்களை வரதட்சணையாக் கேட்டு பெற்றிருக்கிறார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர் சாலா. இவருக்கும் அனீஸ் நடோடி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது தனக்கு வழங்க வேண்டிய வரதட்சணையாக, (மகர்) இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த ஐம்பது புத்தகங்களை சாலா கேட்டுள்ளார்.
மணமகன் அனீசும், சாலா கேட்ட புத்தகங்களை பெங்களூருவில், தேடித்தேடி புத்தகங்களை வாங்கி தன் மனைவிக்கு அளித்துள்ளார்.
இது பற்றி சாலா கூறும்போது, “தங்கம் உள்ளிட்ட பொருட்களை விட விலை உயர்ந்தது புத்தகங்கள்தான். இதை அனைவரும் அறியும்படி செய்யவேண்டும் என்பதாலேயே புத்தகங்களை வரதட்சணையாக கேட்டேன்” என்றார்.