நாடாளுமன்ற தேர்தலில் பணி செய்த தேர்தல் அலுவலகர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தை போனஸாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் தலைமை ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலூர் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், “தேர்தல் பணியை வாக்கு எண்ணிக்கை வரை தொடர்ந்து ஆற்றிய அத்தனை அரசு ஊழியர்களுக்கும் அரசு போனஸ் வழங்குவதற்காக முடிவு செய்துள்ளது. இதற்காக தனிநர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 33,000 வரை அளிக்கப்பட உள்ளது. மே 1, 2019ம் தேதியிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்த தேதி வரை கணக்கிட்டு நிதி ஒதுக்கப்படும்.

மாவட்ட தேர்தல் அலுவலர், வருவாய்துறை அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், தாசில்தார்கள், வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோர் அதிகபட்சமாக ரூ. 33,000 வரை போனஸாக பெறுவார்கள். அதைப்போலவே பறக்கும் படை அதிகாரிகள், வீடியோ பதிவாளர்கள், வீடியோ ஆய்வாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ரூ. 24,500-க்கு குறைவில்லாமல் போனஸ் தொகையை பெறுவார்கள். அதேநேரம், இதர தேர்தல் அதிகாரிகள், ரூ. 17,000, ரூ. 7,000 மற்றும் ரூ. 5,000 என்று 3 பிரிவுகளின் கீழ் போனஸ் தொகையை பொறுப்புகளுக்கு ஏற்ப பெற்றுக்கொள்வார்கள்.

பணியில் இருக்கும்போது முன்பணம் பெற்றிருக்கும் அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளது. முன்பணம் பெற்ற அதிகாரிகளுக்கு போனஸ் தொகையிலிருந்து, பணம் பிடித்தம் செய்யப்பட்டு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.