சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை, கிண்டி கவர்னர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகை திரிஷா வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமீப காலமாக நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும், ஏற்கனவே பள்ளிகள், ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக அரசு அலுவலகங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையில் சோதனையில் இந்த மிரட்டல்கள் புரளி என்று தெரியவருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ஸ்டாலினின் வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. சென்னை பாஜக தலைமை அலுவலகம், மந்தைவெளி பகுதியில் உள்ள நடிகர் மற்றும் பாஜக முன்னணி எஸ்.வி. சேகரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய நிலையில், இந்த வெடி குண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், த.வெ.க தலைவர் விஜய் வீட்டுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. கரூர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனாலும், இந்த மிரட்டல் புரளி என்பது விசாரணையில் தெரியவந்தது.