சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அலர்ட் செய்யப்பட்ட நிலையில், போனில் மிரட்டல் விடுத்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ளது. அவருக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களா சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ளது ஆனால் அவர் அரசு பங்களாவை தவிர்த்து தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து முதல்வரின் தேனாம்பேட்டை வீடு பரபரப்படைந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். எங்கும் எவ்விதமான வெடி பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, தொலைபேசியில் வந்தது புரளி என்பது தெரிய வந்தது.
இதற்கிடையில், தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட எண்ணை வைத்து காவல்துறையினர் துரிதமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், தொலைபேசியில் பேசியவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. விசாரணையில், குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த, இசக்கிமுத்து என்பவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு து விரைந்து சென்ற பூதப்பாண்டி போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.