குன்னூர்; ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து, அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த ஆந்திர நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் விடுமுறை என்பதால் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அதிகாலையில் மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர், ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ளூர் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தினர். ஆனால் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து பேசினார் என சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பேசியது தெரிய வந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.