மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர் சோதனை கோவிலில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்றிரவு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறை ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் மற்றும் துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் 4 சித்திரை வீதி மற்றும் ஆடி வீதிகளில் சோதனை செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை வழக்கத்தை விட அதிகப்படியான சோதனைக்கு பின்பு கோவிலினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் மின்னஞ்சல் கொடுத்தது யார்? எங்கிருந்து கொடுத்துள்ளனர்? விளையாட்டுத்தனமாக கொடுத்த மின்னஞ்சல் அல்லது உள்நோக்கத்தோடு கொடுத்த மின்னஞ்சல் போன்ற பல்வேறு கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சல் அனுப்பிய நபரை தேடி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையான ஒன்று அதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதிலும் கூட பக்தர்களின் கூட்டம் மற்றும் ஐயப்பசாமி அதிகமாவே வந்து கொண்டிருக்கிறது.
திடீரென இன்று 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்களிடையே பரபரப்பு காணப்பட்டது.
செய்தி & வீடியோ உதவி: பொதிகை குமார்