சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு  ஒரே நேரத்தில்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க தமிழ்நாடு காவல்துறை. இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் தலைசிறந்த காவல்துறையான  ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான  தமிழ்நாடு காவல்துறை, இந்த வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவரும் நிலையில், இண்டர்போல் உதவிய நாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள 13 பிரபலமான தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது,. காலை 10.30 மணியளவில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இமெயில் தொடர்பான தகவலை போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து ஒரு சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 13 பள்ளிகளுக்கு இமெயில் வந்தது .

இந்த தகவல் வெளியே பரவிய நிலையில் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. மேலும் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளை அழைத்து செல்ல தொடங்கினர். காலை 11மணி முதல் சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டதுடன், பெற்றோர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம் அச்சம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட நிலையில், இது புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த  சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வெடிகுண்டு  மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்ட தாகவும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி என தெரியவந்துள்ளதாகவும்,  இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என கூறினார்.

மேலும், இந்த மிரட்டல் மெயில் அனைத்தும் ஒரே இ மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,   மெயில் அனுப்பிய நபரை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர் என்றார்.

இந்தநிலையில் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பிய  குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.  ஏற்கனவே இதே போல சென்னை எலியட்ஸ் கடற்கரையில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட அதே மெயில் ஐடியில் இருந்து தற்போதும் இமெயில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க , மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளார். இண்டர்போல் உதவியோடு குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிர முயற்சி எடுத்துள்ளனர்.

அப்பாவி குற்றவாளிகளையும், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக குற்றம் சாட்டினால், அதிரடியாக சென்று இரவோடு இரவாக கைது செய்யும் காவல்துறை, இந்த விஷயத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவது தமிழ்நாடு காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.