டெல்லி:  நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஏற்கனவே இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. இதனால்,  இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதடன்,   பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக பள்ளிகள், அரசு துறைகள் அலுவலகங்க்ள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என முக்கிய பகுதிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல் மெயில்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து விடுக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை, உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்துள்ளது. டெல்லி சாணக்யபுரியில் உள்ள சமஸ்கிருதி பள்ளி, ஆர்.கே.புரத்தில் உள்ள டி.பி.எஸ்., தெற்கு மாவட்டத்தில் உள்ள வசந்த் குஞ்ச் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிகாலை 4 மணியளவில் இந்தக் கல்வி நிறுவனங்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை வெடிக்கச் செய்யப் போவதாகவும் கூறப்படும் மின்னஞ்சல்கள் வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். .

இதையடுத்து பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள் உடனடியாக கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரிகள், டெல்லி மற்றும் என்சிஆரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணையில்,  இந்த இமெயில்கள் அனைத்தும் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளதாக  தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அனைத்து மத்திய ஏஜென்சிகளும் டெல்லி போலீஸ் மற்றும் நொய்டா போலீசாரிடமிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன. தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ) அனைத்து மின்னஞ்சல்களையும் கவனித்து வருகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

இதுகுறித்து கூறிய டெல்லி டி.ஐ.ஜி., கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), நொய்டா, ஷிவ்ஹரி மீனா, “டிபிஎஸ் நொய்டாவில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தது. நொய்டா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு படை குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் இன்னும் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ” வெடிகுண்டு படை மற்றும் டெல்லி போலீஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் குழுக்கள் பள்ளிகளில் உள்ளன. “ஒரு விசாரணை நடந்து வருகிறது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க சைபர் காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளன” என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஒரு வெளிநாட்டு நெட்வொர்க்கின் VPN மூலம் முதன்மை முகமாக, அனுப்புநர் மின்னஞ்சல் உருவாக்கப்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.