ஆக்ரா,

லக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகால் குறித்து பாரதியஜனதா கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி வருகின்றனர். இதற்கு சான்றாக உ.பி. மாநில அரசும் தனது மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை அகற்றி உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தாஜ்மஹாலுக்கு குண்டு வைக்கப்பட்டதாக புரளி ஏற்பட்டுள்ளது.

 

நேற்று இரவு தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக  மிரட்டல் வந்தது. உ.பி. தலைநகர்  லக்னோவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்.100-க்கு நேற்று இரவு 9.40 மணிக்கு வந்த மர்ம போனில் பேசியவர்,  தாஜ்மகாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் ஆக்ரா நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தாஜ்மஹால் பகுதிக்கு சென்ற ஆக்ரா போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அவர்களுடன், வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 100 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தாஜ்மகால் கட்டிடம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்   சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் , வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, போன் மிரட்டல் போலியானது என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.

வரும் 26-ந்தேதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இருக்கும் நிலையில், வெடிகுண்டு புரளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.