சென்னை

வெடிகுண்டு வைப்பது இஸ்லாமிய கொள்கை அல்ல என தமிழக தவ்ஹீத் ஜமாத் பொது செயலர் முகமது தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டொர் மரணம் அடைந்தனர். அத்துடன் 500க்கும் மேற்ட்படோர் படுகாயம் அடைந்தனர். உலகெங்கும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காரணம் என இலங்கை அரசு தெரிவித்தது. தற்போது ஐஎஸ் இயக்கம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றது.

ஆயினும் தவ்ஹீத் ஜமாத் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. இதை ஒட்டி தமிழ்நாடு தவ்ஜீத் ஜமாத் பொது செயலர் ஈ முகமது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முகமது, “எங்கள் இயக்கம் 30 ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆயினும் கடந்த 2004 ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்டது. விக்கிபீடியாவில் 3 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக காணப்பட்டாலும் உண்மையில் 8 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுவரை எங்களை எந்த ஒரு பத்திரிகையாளரும் தவறாக நினைத்ததில்லை. ஆனால் தற்போது இலங்கை குண்டு வெடிப்பால் நாங்கள் உங்களிடம் விளக்கம் அளிக்க நேர்ந்துள்ளது. இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது. வெடிகுண்டு வைப்பது இஸ்லாமிய கொள்கை அல்ல. தற்போது சாதாரண இஸ்லாமியர்களையும் மக்கள் சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாத்துக்கும் தமிழக தவ்ஹீத் ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரு அமைப்புக்களின் பெயர்களும் தவ்ஹீத் ஜமாத் என உள்ளதால் பலரும் தவறாக நினைக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பெயர்களில் ஒரே எழுத்துக்கள் உள்ளன. அதனால் அவை இரண்டும் ஒன்று என சொல்வதைப் போலத்தான் இதுவும்” என கூறி உள்ளார்.